சென்னை:வானகரத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் ரகுராம், அண்ணா நகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். தன்னுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு எம்பிஎல் கோல்டு என்ற நிறுவனம் தொடர்பாக குறுஞ்செய்தி வந்ததாகவும், தங்கள் செயலியை பதிவிறக்கம் செய்து, பணம் முதலீடு செய்தால் லாபம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்ததாகவும் புகாரில் கூறியுள்ளார். ஆன்லைனில் கோல்ட் டிரேடிங் மூலமாக பணத்தை சம்பாதிக்கலாம் எனக் கூறி நம்ப வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக, வாட்ஸ் அப் மூலம் அனுப்பும் செயலியின் லிங்கை வைத்து செல்போனில் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். meeri gold என்ற பெயரில் வரும் செயலியை பதிவிறக்கம் செய்தவுடன், நிறுவனமே 5 லட்ச ரூபாய் முதற்கட்டமாக முதலீடு செய்து ஆன்லைன் கோல்டு டிரேடிங் செய்ய உதவும். அவ்வாறு ஆன்லைனில் கோல்ட் டிரேடிங் செய்ய தனது பெயர், வங்கி கணக்கு, ஆவணங்களை பயன்படுத்தி முதற்கட்டமாக லாபம் பார்க்கலாம் என்பன உள்ளிட்ட ஆசை வார்த்தைகளை காட்டி நம்ப வைத்ததாக அவர் தெரிவித்து உள்ளார்.
வாட்ஸ் அப்பில் இவர்கள் வெளிநாட்டு எண்ணிலிருந்து தொடர்பு கொண்டு பேசுவதால், இது உண்மையா? என்பதை சோதனை செய்ய வேறொரு மொபைலில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பத்தாயிரம் ரூபாய் பணம் முதலீடு செய்து பார்த்ததாகவும், ஐடி ஊழியர் ரகுராம் தெரிவித்துள்ளார். அவ்வாறு முதலீடு செய்வதில் 3000 ரூபாய் பணம் வங்கிக் கணக்கில் கிடைத்ததாகவும், இதனை நம்பி ஐந்து லட்ச ரூபாய் அளவிலான முதலீட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.
இதன் அடிப்படையில், இரண்டே வாரத்தில் 30 லட்சம் ரூபாய் வரை இந்த செயலியில் லாபம் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். நிறுவனம் கூறியபடி 30 லட்சம் ரூபாய் ஆன்லைன் கோல்ட் டிரேடிங் மூலம் லாபம் கிடைத்தவுடன் நிறுவனத்திற்கான பங்கு 5 லட்சம் ரூபாய் செலுத்திய பிறகு, ஆன்லைன் கோல்டு டிரேடிங் மூலம் செயலியில் வரவு வைக்கப்பட்டுள்ள 30 லட்சம் ரூபாய் பணத்தை வங்கிக் கணக்கில் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், ஐந்து லட்ச ரூபாய் பணத்தை செலுத்திய பிறகு, 30 லட்சம் ரூபாய் பணத்தை செயலியின் கணக்கிலிருந்து வங்கிக் கணக்கிற்கு மாற்ற முயன்றபோது, அரசுக்கு வரி செலுத்த வேண்டும் எனக் கூறி, மேலும் எட்டு லட்ச ரூபாய் செலுத்துமாறு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.