சென்னைகோபாலபுரம் டி.ஏ.வி பள்ளி அருகே கடந்த 15ஆம் தேதி நடந்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். இதேபோல கடந்த 18ஆம் தேதி காவேரி மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்த நபரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுச் சென்றனர்.
இதையடுத்து தொடர்ந்து செல்போன் பறிப்புச் சம்பவங்கள் நடைபெற்றதால் ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணை நடந்து வரும் வேளையில் மீண்டும் அதே டி.ஏ.வி பள்ளி அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் செல்போன் பறிப்புச் சம்பவம் அரங்கேறியது.
கிடைத்தது தடயம்:இதனால் உடனடியாக மயிலாப்பூர் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடம் மற்றும் அருகே உள்ள சுமார் 44 சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளில் பறிப்பில் ஈடுபட்ட நபர்களின் தெளிவான முகம் கிடைக்கவில்லை. ஆனால், அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண் கிடைத்தது.
பின்னர் கிடைத்த இருசக்கர வாகனப்பதிவு எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாகனத்தின் உரிமையாளர் திருத்தணியைச் சேர்ந்த நபர் என்பதும், அவரது மகன் சரவணபெருமாள் அந்த பைக்கினைப் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. பின்பு போலீசாரின் வாட்ஸ்அப் குரூப்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர்களின், இரு சக்கர வாகனப்பதிவு எண்களை அனுப்பித்தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு தனிப்படை போலீசார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தராமல் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபடுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச்சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, தொடர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட அதே நபர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இன்ஸ்டாவும் சிறுமியும் : மேலும் செல்போன் பறிப்பில் 16 வயது சிறுமியும் ஈடுபட்டிருப்பது சிசிடிவி காட்சி மூலம் போலீசாருக்குத் தெரியவந்தது. அந்தச் சிறுமி குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் பதிவிட்டு வந்தது தெரியவந்தது. அந்தச் சிறுமியின் இன்ஸ்டாகிராம் கணக்கை போலீசார் நோட்டமிட்டு வந்தபோது சிறுமி அடிக்கடி மெரினா கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருப்பது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் மெரினா முழுவதும் சிறுமியைத் தேடி அலைந்து உள்ளனர். ஆனால், அதிலும் போலீசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி சிறுமி நான்கு பேர் கொண்ட நண்பர்களுடன் செல்ஃபி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் பதிவாகியுள்ள இடத்தை வைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் லாட்ஜில் எடுத்ததை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து திருவல்லிக்கேணி, தியாகராய நகர் மற்றும் பெரியமேடு உள்ளிட்டப் பகுதிகளில் ஆயிரம் ரூபாய் குறைவாக உள்ள லாட்ஜ்களின் அறைகளை சிறுமி பதிவிட்ட புகைப்படத்துடன் ஒப்பீட்டு ஆன்லைனில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது திருவல்லிக்கேணி ஆதாம் மார்க்கெட்டில் உள்ள ஒரு லாட்ஜில் சிறுமி புகைப்படம் எடுத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக, தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட லாட்ஜின் பார்க்கிங்கில் பார்த்தபோது செல்போன் பறிப்பின்போது அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் இருந்தது.
பின்னர் அறையில் பதுங்கியிருந்த சிறுமி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் தேனாம்பேட்டையைச் சேர்ந்த விவேக் என்கிற குள்ளா(26), காமராஜர் சாலையைச் சேர்ந்த ஜெகன்(26), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீசன்(24), தூத்துக்குடியைச் சேர்ந்த் சரவணபெருமாள்(19) மற்றும் 16 வயது சிறுமி ஆகியோர் என்பது தெரியவந்தது.
போலீசார் விசாரணையில் 16 வயது சிறுமி தூத்துக்குடியிலுள்ள தனது உறவினர் வீட்டுக்குச்சென்றபோது, அங்கு பழக்கமான சரவணபெருமாளை சென்னை சென்றால், நாம் சந்தோஷமாக இருக்கலாம் எனக்கூறி, சரவணபெருமாளை அழைத்துக்கொண்டு அவரது இருசக்கர வாகனத்திலேயே சென்னை வந்துள்ளார் என்பதும், பின்னர் அந்த இருசக்கர வாகனத்தை வைத்தே மொபைல் பறிப்புச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.
குறிப்பாக 16 வயது சிறுமி தனது நண்பர்களிடம் மொபைலில் பேசினால் ஆபத்து வரலாம் என நினைத்து இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சந்திக்க வேண்டும் என கோர்டுவேர்டு மூலமாக குறுந்தகவல் அனுப்பி வந்ததும், அதன் அடிப்படையில் மற்ற நண்பர்கள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஒன்று சேர்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும், அங்கு அடுத்த நாள் எங்கு மொபைல் பறிப்பில் ஈடுபடவேண்டும் என்பதை முதல் நாளிலேயே திட்டம் தீட்டி வந்துள்ளனர் என்பதும், தனியாக வரும் முதியவர்களிடம் மட்டுமே மொபைல் பறிப்பில் ஈடுபட வேண்டும் என்பதையும் 16 வயது பெண் திட்டம் போட்டு கொடுத்து வந்துள்ளதாகவும் தெரிகிறது.
இதேபோல 15 முதல் 19ஆம் தேதி வரை மட்டும் கோட்டூர்புரம், தேனாம்பேட்டை,அபிராமபுரம், ராயப்பேட்டை, வேளச்சேரி எழும்பூர், அண்ணா சாலை உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 16-க்கும் மேற்பட்ட செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது. செல்போன்களை மெரினாவில் குதிரை ஓட்டும் ஜெகன், திருவல்லிக்கேணியில் விற்பனை செய்து அதில் வரக்கூடிய பணத்தில் லாட்ஜ் எடுத்து கஞ்சா, மது பானம் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மூளையாக செயல்பட்ட 16 வயது சிறுமி இதற்கு முன் பல இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் முதன்முறையாக போலீசாரிடம் சிக்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 7 செல்போன்கள், ஒரு ஐபேடு, 15 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பறிப்பில் ஈடுபட பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த 7 மாத கைக்குழந்தை கடத்தல் - மூவர் கைது