தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊடரங்கு காலத்திலும் பொதுமக்கள் பலர் சாதாரண நாட்களைப் போலவே வெளியில் சுற்றி வந்தனர். இதனைத் தடுக்க 'இ-பதிவு' நடைமுறையை அரசு மீண்டும் கையில் எடுத்தது.
அதன்படி, மாவட்டங்களுக்குள் பயணம் செய்ய, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல 'இ-பதிவு' செய்ய வேண்டியது அவசியம் என்று அரசு உத்தரவிட்டது. அதிலும் சென்னையில் ஒரு சரக காவல் பகுதியிலிருந்து மற்றொரு சரக காவல் பகுதிக்கு செல்வதற்கு 'இ-பதிவு' கட்டாயமாக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னையில் சோதனைச் சாவடிகள் அதிகம் அமைக்கப்பட்டு காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.