சென்னை:2021ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த 12 வயது சிறுமிக்கு 47 வயதான நபர் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது.
சென்னையை சேர்ந்த 47 வயதான நபர், அவர் வசிக்கும் அதே பகுதியில் குடியிருந்து வந்த 12 வயது சிறுமிக்கு, கடந்த 2021 ஆண்டு ஏப்ரல் 30 தேதி பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வண்ணாரப்பேட்டை காவல் துறையினர், அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குழந்தைகளுக்கான போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலெட்சுமி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பின் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ள காரணத்தால், குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் தீர்ப்பு அளித்தார்.
இதையும் படிங்க:கிராமத்தில் புகுந்த மர்ம விலங்கு... கூண்டு, கேமரா அமைத்து வனத்துறை தேடுதல் வேட்டை! மலைக் கோயிலுக்கு மக்கள் செல்ல தடை!