கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. அதையடுத்து தற்போது மத்திய அரசின் அனுமதியின்படி உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டுவருகின்றன.
அதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று டெல்லி, பெங்களூரு, திருவனந்தபுரம், கொச்சி, கொல்கொத்தா, சிலிகுரி, விஜயவாடா, கடப்பா, சேலம், மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு 23 விமானங்கள் செல்கின்றன.
அதேபோல் அந்தந்த நகரங்களிலிருந்து சென்னைக்கு 24 விமானங்கள் வருகின்றன. அதன்படி மொத்தம் 47 விமானங்கள் இன்று சென்னையில் இயக்கப்படுகின்றன.
கா்நாடக மாநில அரசு தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலிருந்து விமானங்கள் வருவதற்குத் தடைவிதித்துள்ளதாகக் கூறப்பட்டது. ஆனாலும் சென்னையிலிருந்து இன்று காலை 6.40 மணிக்கு பெங்களூரு செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் 82 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.
அதேபோல் காலை 8.45 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் அங்கிருந்து சென்னைக்கு வந்தது. சென்னையிலிருந்து மும்பைக்கு இன்று விமானம் இயக்கப்படவில்லை. அதேபோல அந்தமான், திருச்சிக்குப் போதிய பயணிகள் இல்லாததால் இன்று விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணம் செய்த இருவருக்கு கரோனா