தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்ற மாநிலங்களின் எண்ணிக்கையை முறியடித்து, 40ஆயிரத்தைக் கடந்து செல்கிறது. இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று ருத்ரதாண்டவம் ஆடி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலத்திலிருந்து தமிழ்நாடு திரும்புவோரும் கரோனா தொற்றுடன் திரும்புவது மேலும் பீதியை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை இன்றைய கரோனா பாதிப்பு குறித்து வெளியிட்ட அறிக்கையில், 'தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 15) 18 ஆயிரத்து 403 பேருக்கு சளி மற்றும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதில் ஆயிரத்து 843 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 46 ஆயிரத்து 504 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 537 நபர்களின் பரிசோதனைகள் ஆய்வகங்களில் நடைபெற்று வருகிறது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 20 ஆயிரத்து 678 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், இன்று (ஜூன் 15) 797 பேர் பூரண குணமடைந்த நிலையில், இதுவரை 25 ஆயிரத்து 344 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்று (ஜூன் 15) 44 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 479ஆக உயர்ந்துள்ளது.