சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த 9ஆம் தேதி முதல் இந்த பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகையை வாங்கவில்லை என கூட்டுறவுத்துறைத் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையைப் பொறுத்தவரை, வட சென்னையில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 728 குடும்ப அட்டைகளுக்கும், தென் சென்னையில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 552 குடும்ப அட்டைகளுக்கும் தலா 1000 ரூபாய் பணம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், வட சென்னையில் 9 லட்சத்து 83 ஆயிரத்து 5 பேரும், தென் சென்னையில் 9 லட்சத்து 90 ஆயிரத்து 14 பேரும் மட்டுமே பொங்கல் பரிசு பணத்தை வாங்கிச்சென்றுள்ளனர். வட சென்னையில் 72 ஆயிரத்து 335 குடும்ப அட்டைதாரர்களும், தென் சென்னையில் 49 ஆயிரத்து 538 குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசுத் தொகையை வாங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8,026 அட்டைதாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,263 அட்டைதாரர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 8,874 அட்டைதாரர்களும் பொங்கல் பரிசுத் தொகையை வாங்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டு, அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில், 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகை வாங்காததால், 43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் அரசுக்கு திரும்பி வந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாநகராட்சி கூட்டத்தில் மயங்கி விழுந்த திமுக கவுன்சிலர்