சென்னை:மீன் வளத்தைப்பாதுகாத்தல், நிலையான மீன்பிடிப்பு மற்றும் மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கச்செய்தல், மீன்பிடிப்படகுகளைப்பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பத்தில், ரூ.16.80 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம் மற்றும் கடல் அரிப்பு தடுப்புப்பணிகள், தென்காசி மாவட்டத்தில் கடனா நதி மீன் பண்ணையில் ரூ. 5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மீன்வளர்ப்புத்தொட்டிகள், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறில் ரூ.2.50 கோடி செலவில் நவீனப்படுத்தப்பட்ட மீன்பண்ணை, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், பிளவக்கல்லில் ரூ.1.81 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட அரசு மீன் பண்ணை ஆகியவைகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் மீன் பண்ணை ரூ.2.85 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டதுடன், அப்பண்ணையில் புதிதாக கட்டப்பட்டுள்ள வண்ணமீன் வளர்ப்புக்கூடம் மற்றும் பயிற்சி மையம்; தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மஞ்சளாறு கிப்ட் திலேப்பியா மீன்குஞ்சு பொரிப்பகத்தில் ரூ.81 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புச்சுவருடன் கூடிய மீன் வளர்ப்புக்குளம்; தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், வைகை அணையில் ரூ.1.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மீன்விதை வளர்ப்புத்தொட்டிகள் ஆகியவைகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.