சென்னை அமைந்தகரையில் காணாமல்போன நான்கு வயது குழந்தையை 8 மணி நேரத்தில் காவல் துறையினர் மீட்டனர். குழந்தையின் பெற்றோர், காவல் துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், கூடுதல் ஆணையர்கள் தினகரன், பிரேம் ஆனந்த் சிங்கா உட்பட பல்வேறு காவல் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், குழந்தையை 8 மணி நேரத்தில் மீட்கப் போராடிய காவல் துறையினருக்கு காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பாராட்டினார். பின்னர் அவர் பேசுகையில், "இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் சென்னை மாநகரம் முதன்மையாக இருக்கிறது. 8 மணி நேரத்தில் குழந்தையை மீட்கும் வல்லமை பெற்ற காவலர்கள் சென்னையில் இருப்பதே அதற்குக் காரணம். பணிப்பெண்களை நியமிக்கும்போது அவர்களின் முழு விவரங்கள் பற்றி ஆராயவேண்டும். அவர்களின் மேல் ஏற்கெனவே வழக்குகள் ஏதேனும் உள்ளதா என்று காவல்துறையை அணுகி விசாரித்து கொள்ள வேண்டும்" என்றார்.