சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் ஜகன்(37); கார் ஓட்டுநர். இவர் கடந்த ஏப்.28ஆம் தேதி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், சென்ட்ரல் அருகே மதுரவாயல், தாம்பரம் செல்ல வேண்டும் என 'ஓலா ஆப்' மூலம் புக் செய்து இரண்டு நபர்கள் எனது காரில் ஏறினர். சிறிது நேரத்தில் இருவரும் மதுபானம் வாங்கி வருமாறு என்னை கேட்டு கொண்டதையடுத்து, நான் காரை நிறுத்தி விட்டு மதுபானம் வாங்கிய பின்னர், திரும்பி வந்து பார்க்கும் போது தனது காரை அந்த இரு நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
அவர்கள் இருவரையும் கைது செய்து தனது காரை மீட்டு தருமாறு அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து கோயம்பேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், நசரத்பேட்டை பகுதியிலும் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி அதே நபர்கள் காரைத் திருடி சென்றது தெரியவந்ததது.
இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது திருடர்களின் முகம் சரியாக தெரியாததால், 'ஓலா ஆப்'பில், அந்த நபர்கள் புக் செய்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் காரை திருடிச் சென்றவர்கள் கார்த்திக் (27), குலோத்துங்கன்(23) என்பது தெரிய வந்தது.