ஆந்திராவைச் சேர்ந்த நகை வியாபாரி தினேஷ். இவர் கடந்த வாரம் சென்னை செளகார்பேட்டையில் தங்கம் வாங்க வந்துள்ளார். அப்போது, நான்கு பேர் கொண்ட் கும்பல் டெல்லி காவல் துறையினர் போல் நடித்து, அவரிடமிருந்து 4.3 கிலோ கிராம் தங்கத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து தினேஷ் அளித்த புகாரின் பேரில் யானைகவுனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், கொள்ளையடித்த நான்கு பேரும் மத்தியப் பிரேதசத்தில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 12ஆம் தேதி தனிப்படை காவல் துறையினர் மத்தியப் பிரதேசத்திற்கு விரைந்தனர். அங்கு மத்தியப் பிரதேச காவல் துறையினர் உதவியுடன் வீட்டில் பதுங்கியிருந்த நான்கு பேரை தழிழ்நாடு காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ 700 கிராம் தங்கத்தையும், 1 லட்சத்து 10ஆயிரம் ரூபாய் பணம், 10 செல்ஃபோன் உள்ளிட்டவைகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கொள்ளையில் ஈடுபட்டது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஈரானிய கொள்ளையர்கள் மெஹந்தி ஹுசைன், அபுஹைதர் அலி, சாதிக், ஆசன் அலி ஆகியயோர் என்பது தெரிய வந்தது.