சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் புறப்பட தயாரான ரயிலின் நான்கு பெட்டிகள் தனியாக கழன்று சென்றதால் பயணிகள் அச்சம் அடைந்தனர் சென்னை: கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இன்று (மே 16) காலை 5.35 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றது. இதனையடுத்து, 5.55 மணியளவில் ரயில் புறப்பட தயாரானது. அப்போது நான்கு பெட்டிகள் மட்டும் தனியாக பின்னோக்கி கழன்று சென்றுள்ளது.
இதனை அறியாத லோகோ பைலட் ரயிலை இயக்கி உள்ளார். சுமார் 50 மீட்டர் தூரம் சென்றதும், ரயில் இணைப்பில் நான்கு பெட்டிகள் இல்லாததை அறிந்த லோகோ பைலட் ரயிலை நிறுத்தி உள்ளார். இதனிடையே, ரயில் இரண்டு பகுதிகளாக பிரிந்து செல்வதை அறிந்த பயணிகள், ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டதா என அச்சம் அடைந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
இதனால் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, ரயில்வே ஊழியர்கள் நிலைமையை எடுத்துக் கூற பயணிகள் சற்று நிம்மதி அடைந்தனர். தற்போது கழன்று சென்ற நான்கு பெட்டிகளை ரயிலுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பணிக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இதையும் படிங்க:"இரண்டு ஆண்டு திமுக ஆட்சி, கள்ளச்சாராய மரணங்களே சாட்சி"- அண்ணாமலை