சென்னை: அயனாவரம் முத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). இவர் தரமணியில் உள்ள மத்திய அரசின் நேஷ்னல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி டீச்சர்ஸ் டிரைனிங் மற்றும் ரிசர்ச் நிறுவனத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் ஆர்த்தி என்பவர் மூலம் கோயம்பேட்டை சேர்ந்த ராதா (40) என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது.
பின்னர் ராதா தொழில் செய்ய வேண்டி பேராசிரியர் ராஜேந்திரனிடம் 4.50 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். பல ஆண்டுகள் ஆகியும் ராதா வாங்கிய கடனை திருப்பி தராததால் பேராசிரியர் ராஜேந்திரன் 2019ஆம் ஆண்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ராதா வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிமன்றம் ராதாவுக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.
இதனால் பயந்து போன ராதா உடனே ராஜேந்திரனை செல்போனில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டதுடன் கொடுங்கையூரில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்து பணத்தை பெற்று கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இதனை நம்பி ராஜேந்திரன் ராதா கூறியது போல் கொடுங்கையூர் லட்சுமியம்மன் கோயில் தெருவில் உள்ள ராதாவின் நண்பர் புஷ்பா (49) என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு ராதா மற்றும் அவரது நண்பர்கள் புஷ்பா (49), லட்சுமி (30), அவரது கணவர் முருகன் (40) ஆகியோர் இருந்துள்ளனர். பின்னர் ராதா வீட்டிற்கு வந்த ராஜேந்திரனுக்கு தண்ணீரில் மயக்க மருந்து கலக்கி கொடுத்துள்ளார். இதனை வாங்கி குடித்த ராஜேந்திரன் அங்கேயே மயங்கி விழுந்தார். இந்நிலையில் ராதா, புஷ்பா, லட்சுமி, அவரது கணவர் முருகன் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து ராஜேந்திரனை நிர்வாணமாக்கி பின்னர் லட்சுமியை அவருடன் இருப்பது போல் ஆபாச வீடியோ எடுத்துள்ளனர்.
பின்னர் மயக்கம் தெளிந்து ராஜேந்திரன் ராதாவிடம் பணத்தை கேட்டுள்ளார். உடனே ராதா, ராஜேந்திரனின் ஆபாச வீடியோவை காண்பித்து பணம் கேட்டு மிரட்டினால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த ராஜேந்திரன், இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் காவல் துறையினர் ராதா, புஷ்பா, லட்சுமி, அவரது கணவர் முருகன் ஆகிய 4 பேர் மீதும் கொலை மிரட்டல், அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக கையாளுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து கொடுங்கையூர் காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:கோவையில் மருத்துவ மாணவி தற்கொலை