சென்னை:அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சாதி பிரிவினை ஊக்கப்படுத்தியதாக மூன்று பேராசிரியர்கள் அதிரடியாக வேறு கல்லூரிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் சாதிப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் குழுவை ஆரம்பித்து பேராசிரியர்கள் செயல்பட்டு வருகின்றனர் என மாணவர்களிடம் இருந்து கல்லூரியின் முதல்வருக்கு புகார்கள் வந்து உள்ளன.
மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கல்லூரியின் முதல்வர்கள் ஆய்வு செய்து உள்ளனர். அதனைத் தொடர்ந்து கல்லூரி கல்வி இயக்குநருக்கு அறிக்கை அளித்தனர். அதனைத் தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி பாகுபாடு காட்டி கல்லூரிகளில் சாதி மோதல்களை உருவாக்கும் வகையில் செயல்பட்டதாக பணியிட மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் அதிரடியாக உத்தரவிட்டது.
இதையும் படிங்க:"தேசிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு பயன் அளிக்கும்" - கல்வியாளர் சதீஷ் கருத்து
அதன் படி சென்னை வியாசர்பாடி கல்லூரியில் பணியாற்றும் ரவி மயிசின், சிவகங்கையில் பணியாற்றும் கிருஷ்ணன், கும்பகோணத்தில் பணியாற்றும் சரவண பெருமாள் ஆகிய பேராசிரியர்கள் மூன்று பேர் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் மாணவர்களிடம் விசாரணை நடத்திய போது, மாணவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருப்பதாகவும், பேராசிரியர்கள் தான் சாதிப் பிரிவினையை தூண்டுவதாகவும் கூறி உள்ளனர்.
மேலும் ஆசிரியர்கள் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி அதில் சாதிய ரீதியான கருத்துகளை பதிவிட்டு வந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிடைத்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் பேராசிரியர்கள் வேறு ஊர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் எனவும் கல்லூரி கல்வி இயக்ககம் எச்சரித்து உள்ளது.
இதையும் படிங்க:தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!