தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நமது சிங்காரச் சென்னைக்கு வயது 380! - இன்று சென்னை தினம் - சென்னையிட்ஸ்

உலகின் இரண்டாவது பெரிய நகர்ப்புற கடற்கரையை உடைய நகரம், உலகின் இரண்டாவது பழைமையான கார்ப்பரேஷன், நாட்டின் நான்காவது பெரிய நகரம் இப்படி பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தமான சென்னைக்கு நேற்றோடு 380 வயது முடிந்து, இன்று 381ஆம் வயது தொடங்கியுள்ளது!

madras day

By

Published : Aug 22, 2019, 2:38 PM IST

Updated : Aug 22, 2019, 3:23 PM IST

சென்னை தினம்

இன்று 380ஆவது சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை தோற்றுவிக்கப்பட்ட 1639 ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் சென்னை தினம் கொண்டாடப்பட்டு-வருகிறது.

ரிப்பன் பில்டிங் இல்லாமல் சென்னையா?

சென்னை பெயர் காரணம்

வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர் பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகியோரிடமிருந்து சிறு நிலப்பகுதியை வாங்கி அதில் மெட்ராஸ் நகரத்தை உருவாக்கி செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டியது கிழக்கிந்தியக் கம்பெனி. புதிய நகரத்துக்கு நிலத்தை வழங்கிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் நினைவாக, கோட்டைக்கு வடக்கே இருந்த ஊர் சென்னப்பட்டனம் என்று அழைக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்தபோது, மெட்ராஸ் தமிழ்நாட்டின் தலைநகரானதோடு சென்னை என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

சென்னை தினம் கொண்டாட்டம்

சசி நாயர், வின்சென்ட் டி சொஸா, முத்தையா ஆகிய மூன்று பத்திரிகையாளர்கள் சேர்ந்து 2004ஆம் ஆண்டு சென்னையின் பல்வேறு முக்கிய இடங்களின் கறுப்பு வெள்ளைப் படங்களைக் கொண்ட புகைப்படக் காட்சியை வைத்து சிறிய அளவில் சென்னை தினத்தைக் கொண்டாடினார்கள். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் மாரத்தான் ஓட்டம், உணவுத் திருவிழா என ஒவ்வொன்றாக வளர்ந்து தற்போது வானொலி, தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.

மெரினாவின் ரம்மியகரமான காட்சி

சென்னையின் சிறப்புகள்

வந்தாரை வாழவைக்கும் நகரம் என்று போற்றப்படும் நமது சிங்காரச் சென்னைக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. அவற்றில் சில...

  • உலகில் இரண்டாவது பெரிய நகர்ப்புற கடற்கரையைக் (Urban Beach) கொண்ட நகரம் சென்னை. மெரினா கடற்கறையின் நீளம் 13 கி.மீ. ஆகும்.
  • இந்தியாவின் முதல் கார்ப்பரேஷன் சென்னை கார்ப்பரேஷன்தான். உலகின் இரண்டாவது பழைமையானதும் சென்னை கார்ப்பரேஷன்தான். அது உருவாகக் காரணமான ரிப்பன் பெயரால் அமைக்கப்பட்டதுதான் ரிப்பன் கட்டடம்.
  • தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகத்தைக் கொண்டது (அண்ணா நூற்றாண்டு நூலகம்) சென்னை.
    சென்னையின் ஐகான்
  • இந்தியாவிலேயே மாணவர்களுக்கு முதன்முதலில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தது சென்னை மாநகராட்சியில்தான்!
  • இந்தியாவின் மிகப்பழமையான பொறியியல் கல்விக்கூடம் கிண்டி பொறியியல் கல்லூரிதான்.
  • இந்தியாவின் முதல் வானொலி சென்னையில்தான் தொடங்கப்பட்டது. பிரசிடென்சி ரேடியோ கிளப் என்ற பெயரில் கிருஷ்ணஸ்வாமி செட்டியாரால் வானொலிச் சேவை ஆரம்பிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகே அரசு வானொலிச் சேவை தொடங்கப்பட்டது.
  • இந்தியாவிலேயே நகர எல்லைக்குள் தேசிய பூங்கா (கிண்டி சிறுவர் தேசியப் பூங்கா) இருக்கும் ஒரே நகரம் சென்னைதான்.
  • இந்தியாவின் முதல் வங்கி சென்னையில்தான் தொடங்கப்பட்டது. ஆளுநர் க்ரிபோர்ட் அவர்களால் 1682இல் மெட்ராஸ் வங்கி தொடங்கப்பட்டது.
  • ஆசியாவின் முதல் கண் மருத்துவமனை (Madras Eye Infirmary) சென்னையில்தான் தொடங்கப்பட்டது. (1819)
    சென்னையின் சில பகுதிகள்
  • இந்தியாவின் ரயில் போக்குவரத்துச் சேவை முதன்முதலில் சென்னையில்தான் தொடங்கியது எனலாம். 1837ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் ரயில் சேவை செங்குன்றம் முதல் சிந்தாதிரிப் பேட்டை வரை இயக்கப்பட்டது.
  • கோலிவுட் (Kollywood) எனப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம் சென்னைதான்.
இவற்றுடன், வள்ளுவர் கோட்டம், சென்ட்ரல் (புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர்.) ரயில் நிலையம், அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதிகள், எலியட்ஸ் பீச், அரசு அருங்காட்சியகம் (எழும்பூர்), பிர்லா கோளரங்கம் உள்ளிட்ட ஏராளமான சிறப்புகளைக் கொண்டது சென்னை. 380 வயதைக் கடந்தபோதும் ஆண்டுக்கு ஆண்டு சென்னையின் இளமை கூடிக்கொண்டே போவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். வாழ்த்துகள் சென்னை!
Last Updated : Aug 22, 2019, 3:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details