தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சென்னை மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். நாள்தோறும் ஆயிரம், ஆயிரத்து நூறு என பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. தற்போது உயிரிழப்பு எண்ணிக்கையும் அம்மக்களைக் கலக்கமடையச் செய்துள்ளது.
குறிப்பாக, கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, ராயபுரம், தேனாம்பேட்டை, அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் கரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு வருவதால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே யோசிக்கின்றனர். இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தண்டையார்பேட்டை மண்டலத்தைப் பொறுத்தவரை 140 நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். இங்கு குணமடைந்து வருவோர்களின் எண்ணிக்கை நல்ல விகிதத்தில் உயர்ந்துவருகிறது. மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 120ஆக உயர்ந்துள்ளது.
தண்டையார்பேட்டையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 781ஆக உள்ளது. கரோனா தொற்று பாதிப்பு குறித்து 42 ஆசிரியர்கள் மூலம் 044- 43550604 என்ற தொலைபேசி எண் மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுவருகிறது. கரோனா தொற்று உறுதியாகி, வீட்டுக் காவலிலிருந்து வெளியே சுற்றித்திரிந்த எட்டு பேர் கைதுசெய்யப்பட்டு, மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:கரோனா தொற்றால் இளைஞர் உயிரிழப்பு