சென்னையில் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் பாலிசி எடுத்தால் தனிநபர் கடன் பெற்று தருவதாக ஆசைவார்த்தைக் கூறி பொதுமக்களிடம் முன்பணத்தை பெற்று கொண்ட ஒரு கும்பல், பல லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
அதன் அடிப்படையில் வங்கி மோசடி தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திருவான்மியூர், பெருங்குடி பகுதிகளில் போலியாக கால்சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட தியாகராஜன்(38), கோபிநாத்(28), மணி பாலா(22) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இரு இடங்களில் போலியாக கால்சென்டர் நடத்தி பொதுமக்களிடம் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி, தனிநபர் கடன் பெற்று தருவதாக வாக்குறுதி அளித்து முன்பணம் பெற்று பல லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
குறிப்பாக கைது செய்யப்பட்ட தியாகராஜன், அண்ணா சாலை, ராயலா டவர் அருகே போலி கால்சென்டர் நடத்தி பல கோடி ரூபாய் வரை மோசடி ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பள்ளிகரணையைச் சேர்ந்த செல்வா என்பவரின் கூட்டாளி என்பது தெரியவந்தது. மேலும் 2020ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை போலி கால்சென்டர் நடத்தி மோசடி செய்ததாகக் கூறி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு 365 புகார்கள் வந்துள்ளதாகவும், இது தொடர்பாக 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.