சென்னை:தமிழ்நாட்டில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கு 40 ஆயிரத்து 193 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்தாண்டு 36 ஆயிரத்து 206 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவப்படிப்பிற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 16ஆம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை தேசியத் தேர்வு முகமை வெளியிடாமல் இருப்பதால் கலந்தாய்வு நடைபெறும் தேதி குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜூன் 28ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. மாணவர்கள் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தின் மூலம் ஜூலை 12ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் . இந்த நிலையில் இன்று (ஜூலை 12) மதியம் 2 மணி வரையில் 40 ஆயிரத்து மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், கடந்தாண்டு 36 ஆயிரத்து 206 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். கடந்தாண்டைவிட 3,987 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பம் செய்துள்ளனர்.
மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணம் உயர்வு:இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரியில் 5,050 இடங்களும், கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவமனையில் உள்ள 150 இடங்களும், தமிழ்நாட்டில் உள்ள 2 பல் மருத்துவக்கல்லூரியில் 200 இடங்களும் உள்ளன. இந்த நிலையில், இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவப் படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் 2016-17 ஆண்டிற்கு பின்னர் உயர்த்தப்படாமல் இருந்தது. இந்தநிலையில் அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணம் 2023-24 ஆம் கல்வியாண்டு முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.