சவூதி அரேபியா ஜெட்டாவிலிருந்து சிறப்பு தனி விமானம், 215 இந்தியா்களுடன் சென்னை வந்தது. அதில் ஆண்கள் 196, பெண்கள் 14, சிறுவா் 3, குழந்தைகள் 2. இவா்கள் அனைவரும் சவூதி அரேபியாவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் அவா்கள் குடும்பத்தினா் ஆவர். அந்த நிறுவனமே அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று, தனி விமானத்தில் இந்தியா அழைத்து வந்துள்ளது. இதனால் அவா்களுக்கு சென்னை விமான நிலையத்தில் இலவச மருத்துவப் பரிசோதனை, அரசின் இலவச தங்குமிட வசதிகள் தரப்படவில்லை.
இதையடுத்து அனைவரும் சென்னை நகர உணவகங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். இவா்களுக்குத் தங்கியுள்ள விடுதிகளில் தனியாா் மருத்துவக் குழுவினா், மருத்துவப் பரிசோதனைகள் நடத்துவாா்கள்.
இதனைத்தொடர்ந்து வியட்நாமிலிருந்து சிறப்பு மீட்பு விமானம் 72 இந்தியா்களுடன் சென்னை வந்தது. அதில் ஆண்கள் 61, பெண்கள் 8, சிறுவா்கள் 3. அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் அரசின் இலவச தங்குமிடங்களான சவீதா மருத்துவக் கல்லூரிக்கு 12 பேரும், கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான விடுதிகளுக்கு 51 பேரும் அனுப்பப்பட்டனா். கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த 9 போ் உள்நாட்டு விமானம் மூலம் பெங்களூரு அனுப்பப்பட்டனா்.