சென்னை: இந்தியாவில் உள்ள 19 மாநில அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 77 சதவீத பெண்கள் மட்டுமே பாதுகாப்பான மாதவிடாய் நாள்களை கடப்பது தெரியவந்துள்ளதாக 'குழந்தை உரிமைகளும் நீங்களும்' என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் "குழந்தை உரிமைகளும் நீங்களும்" என்ற தன்னார்வு தொண்டு நிறுவனத்தினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், ‘தேசிய குடும்ப நல்வாழ்வு ஆய்வின்படி, இந்தியாவில் 52 சதவீத பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்து வருகிறது. 49 சதவீத வளரும் பெண் குழந்தைகள் இன்னும் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தாமல் துணிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
பல்வேறு பள்ளிக்கூடங்களில் மாதவிடாய் குறித்து ஆசிரியர்கள் மாணவிகளுக்கு கற்பிப்பது கூட கிடையாது. ஆசிரியர்கள் மாணவிகளுக்கு கற்பித்தாலேயே இதில் இருக்கக்கூடிய மாய பிம்பங்கள் உடைந்து மாதவிடாய் என்பது ஒரு சாதாரண ஒரு விடயமாக மாறும். பள்ளிக்கூடங்களில் இருக்கக்கூடிய கழிவறைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கழிவறைகள் சுத்தமாக இல்லாமல் இருப்பதாலும் மாதவிடாயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் 25 சதவீத பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை இடைநீற்று செய்வதாகவும் ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.