சென்னை:ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரவாக்கத்தில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் குடி போதையில் வட மாநிலத் தொழிலாளர்கள் இரு கும்பலாக மோதிக் கொண்டனர். இது குறித்து இரு கும்பல் மீதும், தொழிற்சாலையின் மேலாளர் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில், காவலர் ரகுபதியுடன் சக காவலர்கள் விசாரணைக்காக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். இதையடுத்து, விசாரணைக்குச் சென்ற காவல் துறையினருக்கும், வட மாநிலத்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், விசாரிக்கச் சென்ற காவலர்களைத் தாக்கி, அவர்களின் வாகனங்களை வடமாநிலத் தொழிலாளர்கள் சேதப்படுத்தியதாக கூறப்பட்டது.
இதில் படுகாயமடைந்த ரகுபதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டுள்ளார். அங்கு அவருக்கு தலையில் 3 தையல் போடப்பட்டுள்ளது என்றும், தோள்பட்டை மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, வடமாநில இளைஞர்கள் தாக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று நடந்த நிகழ்வுகளை தாக்குதலில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இது வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. இந்நிலையில், இது குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
இதனையடுத்து, காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளிகள் மீதும், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், செங்குன்றம் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை காவல் துறையினர் மற்றும் 100க்கும் மேற்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டனர்.
பின்னர் மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 28 வடமாநிலத் தொழிலாளர்களும் அடையாளம் காணப்பட்டு, அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக காவல் ஆணையர் சங்கர் கூறியதாவது, "கடந்த 23ஆம் தேதி இரவு ஓர் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்னை சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து 33 பேரை கைது செய்துள்ளோம். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய எந்த செயலானாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். மேலும், இதுபோல் அசம்பாவிதம் இனி நடைபெறாமல் இருக்க, தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்களை, தொழிலாளர் நலத்துறையினர் மேற்பார்வையிட்டு வருகின்றனர்" எனத் தெரிவித்தது இருந்தார்.
இந்நிலையில் நேற்று (அக்.28) 11 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், சம்பவம் அன்று நடந்த நிகழ்வுகள் குறித்து அதன் உரிமையாளரிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க:அதிமுக - பாஜக பிளவு முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை.. ஈடிவி பாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டி!