தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்வித்தொகை 303 கோடி ரூபாய் - கடைசி கல்வியாண்டு

சென்னை: தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வித்தொகையாக 2018-19ஆம் கல்வியாண்டில் 303.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மெட்ராஸ் உயர்நீதி மன்றம்
மெட்ராஸ் உயர்நீதி மன்றம்

By

Published : Oct 2, 2020, 3:49 PM IST

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 11 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டதை எதிர்த்தும், 2017-18, 2018-19, 2019-20ஆம் கல்வியாண்டுகளில் கல்விச் செலவை மறு நிர்ணயம் செய்யக்கோரியும், 2020-21ஆம் ஆண்டுக்கு நியாயமான கல்வி செலவை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கல்வி செலவுத் தொகையை குறைத்தது தொடர்பாக விளக்கமளிக்கவும், மூன்று ஆண்டுகளுக்கான தொகையை ஆறு வாரங்களில் வழங்கி அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பள்ளிக் கல்வி துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் முனுசாமி அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், அரசு பள்ளியில் பயிலும் ஒரு மாணவருக்கு செலவாகும் தொகை அல்லது கல்வி கட்டண நிர்ணயக் குழு தனியார் பள்ளிகளுக்கு கட்டணமாக நிர்ணயிக்கும் தொகை, இவற்றில் எது குறைவோ அதனை அடிப்படையாக கொண்டே கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பில் நிதி விடுவிக்கப்படும்.

2018 - 2019ஆம் கல்வியாண்டை பொறுத்தவரை அரசு உதவிபெறாத தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்காக வழங்க வேண்டிய 303.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது.

2019 - 2020ஆம் கல்வியாண்டை பொறுத்தவரை தற்போதுதான் அரசு பள்ளியில் பயிலும் ஒரு மாணவருக்கான செலவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இனி தனியார் பள்ளிகள் அரசிடம் கோரியுள்ள கட்டண விகிதங்கள் சரிபார்க்கப்பட்டு அதற்கான உரிய தொகை விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் விளக்கத்தை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details