சென்னை:தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் பணியாற்ற மிக விரைவில், 3000-க்கும் மேற்பட்ட மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ வசதிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று (ஆக.29) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உணர்திறன் மற்றும் செயல்திறன் மேம்பாட்டு பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த உணர்ச்சி ஒருங்கிணைப்பு சிகிச்சை பூங்காவை பொறுத்தவரை, இதன் மூலம் சிந்தனை ஒருமுகப்படுத்துதல், ஐம்புலன் உணர்வுகளை மேம்படுத்துதல், அறிவாற்றலை தூண்டுதல், மூளை செயல்பாட்டை அதிகரித்தல், விழிப்புணர்வை அதிகரித்தல், தசை வளர்ச்சி இயக்கம் மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பயன்கள் இதன் மூலம் கிடைக்க இருக்கிறது.
ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடு:இந்த மருத்துவமனையை பொறுத்தவரை, 50 முதல் 60 வரையிலான ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு உள்ள குழந்தைகள் இதன் மூலம் பயன்பெற இருக்கின்றனர். இந்த பூங்காவில் ஊஞ்சல், ரங்கராட்டினம், ஏற்று பலகை, வலையேறுதல் போன்ற வசதிகளும், தொடுபுலன் உணர்ச்சி மேம்பட பயிற்சி பாதை, நீர் சால் புலன் பயிற்சி, கூழாங்கற்கள், மணற்பரப்பு பயிற்சி, பார்க்கும் திறன் மிளிர ஓவியங்கள், வண்ண நீரூற்றுகள், கற்றல் வகைகள், கற்றோர் பலகைகள், கேட்கும் திறன் மேம்பட இசைமணிகள், இன்னிசை குழாய்கள், இசைக்கருவிகள், நுகர்திறன் மேம்பட மூலிகை தோட்டம், போன்ற பல்வேறு வசதிகளை கொண்ட ஒரு பூங்கா ஒன்று தற்போது பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. இதன்மூலம் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பெரிய அளவிலான பயனுள்ளதாக இருக்கும்.
குறைந்த கட்டணம்: வட சென்னை பகுதியில் முழு உடல் பரிசோதனை குறைந்த கட்டணத்தில் ரூ.1,000 என்கின்ற வகையில் ஒரு முழு உடல் பரிசோதனை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை, 5,806 பேர் முழு உடல் பரிசோதனை மூலம் பயன் பெற்று இருக்கின்றனர். தினந்தோறும் 40 முதல் 50 பேர் வரை முழு உடல் பரிசோதனை மூலம் வடசென்னையில் இருக்கக்கூடிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
பிராணிகள் பராமரிக்கப்பு கூடம்:மாணவர்கள் பயன்பெறும் வகையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரையின் படியும், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிறு பிராணிகள் பராமரிக்கப்படும் கூடம் ஒன்று அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. எலி, முயல் போன்ற சிறு பிராணிகள் அதில் தங்க வைக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கான கற்றல் திறனை அவர்களுக்கு ஏற்படுத்துகின்ற வகையில் அது புனரமைக்கப்பட்டு இருக்கிறது. தேசிய மருத்துவ ஆணையத்திடம் ஐந்து ஆண்டுகளுக்கான அங்கீகாரம் இந்த மருத்துவமனைக்கு கிடைத்திருக்கிறது.
கிரிட்டிக்கல் கேர் பிளாக்: எதிர்வரும் ஆண்டுகளுக்கு இங்கே கூடுதல் வசதிகளாக ரூபாய் 112 கோடி மதிப்பீட்டில் கிரிட்டிக்கல் கேர் பிளாக் (critical Care Block) ஒன்று கட்டப்பட இருக்கிறது. தரைத்தளம் மற்றும் ஆறு தளங்களுடன் கூடிய அந்த கட்டிடம் கட்டும் பணியும் விரைவில் தொடங்கப்படவிருக்கிறது. தரைத்தளம் மற்றும் 6 படுக்கைளுடன் கூடிய கட்டிடத்தில் 300 படுக்கை வசதிகள் கொண்ட கூடுதல் வசதி ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏற்படுத்தப்படவிருக்கிறது.
நீதிமன்றத்தில் வழக்கு: செவிலியர் பயிற்சிப் பள்ளியில் 400 மாணவியர்களுக்கு தங்கும் வசதியுடன் கூடிய கட்டிடம் கட்டப்படவிருக்கிறது. மிகவிரைவில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, டெண்டர் கோரப்பட்டு விரைவில் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். மருத்துவத்துறையில் 1020 மருத்துவ பணியிடங்களுக்கு மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய இருந்த சூழ்நிலையில் ஒரு சில மருத்துவ மாணவர்கள் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை தரக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.