சென்னை:ஜெர்மன் நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகரான பர்த்தலோமியு ஸீகன்பால்க் என்பவர் டென்மார்க் நாட்டு மன்னரின் வேண்டுகோளை ஏற்று 1706ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வந்தார். பின்னர் நாகப்பட்டினத்தில் அச்சகத்தை நிறுவி, தமிழ் மொழியில் இந்திய நாட்டு கலாசாரம் மற்றும் மதம் சம்பந்தமான படிப்புகளை வெளியிட்டார்.
அதன் பின்னர் 1715ஆம் ஆண்டு புதிய ஏற்பாடு பைபிளை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்து அச்சடிக்கவும் செய்தார். பர்த்தலோமியு ஸீகன்பால்க், 'செந்தமிழ் பயின்ற ஜெர்மானியர்' என்று அழைக்கப்படுகிறார்.
1719ஆம் ஆண்டு ஸீகன்பால்க் இறந்த பின்பு அரிய வகை பைபிள் அப்போதைய தஞ்சாவூர் சரபோஜி மன்னருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இதையடுத்து பிற்காலத்தில் தமிழ்நாடு அரசாங்கத்தால் பைபிள் கைப்பற்றப்பட்டு தஞ்சை சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
லண்டனில் கண்டுபிடிப்பு:இந்நிலையில் விலைமதிப்பற்ற இந்த பைபிள் காணாமல் போய்விட்டதாக சரஸ்வதி மகால் அருங்காட்சியத்தின் நிர்வாக அலுவலர், தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு புகார் அளித்தார். கண்டுபிடிக்க முடியாத வழக்காக முடித்துவைக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக கடந்த 2017ஆம் ஆண்டு மீண்டும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சிலைக் கடத்தல் தடுப்புப் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.