சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகரில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பங்கில் காலை வாடிக்கையாளர்கள் பெட்ரோல் போட்டு விட்டுச் சென்ற போது சிறிது தூரத்திலேயே வாகனங்கள் பழுதாகி நின்றுள்ளது.
இதனால் வாகனத்தில் இருக்கக்கூடிய பெட்ரோலை குழாய் மூலம் எடுத்து சோதனை செய்துள்ளனர். அப்போது பெட்ரோலுடன் தண்ணீரும் கலந்து வந்ததால், இதைப் பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சமயத்தில் சிலர் பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் போடுமாறு தெரிவித்தனர். அப்போதும் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வருவது தெரிந்ததால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயில் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும் ஒரு பாட்டிலில் பெட்ரோலை பிடித்து சோதனை செய்து பார்த்தனர். அப்போது பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வருவதைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பெட்ரோல் பங்கை மூடுமாறு ஊழியர்களிடம் தெரிவித்தனர்.