சென்னை:எல்லா வருடமும் ஆகஸ்ட் மாதம் தொடங்கியது முதலே தமிழக டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு கர்நாடகா வழங்குகின்ற காவிரி நீரை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது. அதிலும் இந்த வருடம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைபடுத்தாமல் கர்நாடக அரசு குறைந்த அளவு டி.எம்.சி நீரை மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது.
இதனால் குறுவை சாகுபடிக்கு சரியான நீர் கிடைக்காமல் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இருப்பினும் இது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவினை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது தமிழக அரசு.
இப்படி குறுவை சாகுபடிக்கும், சம்பா சாகுபடிக்கும் உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் இந்த பயிர்கள் சாகுபடியாகுமா? அல்லது சாகும்படி ஆகுமா என கேள்வி எழுந்துள்ளது. ஏன் எல்லா வருடமும் டெல்டா விவசாயிகளின் நலனை காக்க உச்ச நீதிமன்றத்தையும், கர்நாடக அரசையும் நாம் நாட வேண்டும் என்ற கேள்வியை ஓய்வு பெற்ற மூத்த பொறியாளர் அ.வீரப்பன் முன் வைக்கிறார்.
இது தொடர்பாக ஈடிவி பாரத் ஊடகத்திற்கு ஓய்வு பெற்ற மூத்த பெறியாளர் அ.வீரப்பன் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் உள்ள ஆங்கிலேய காலத்து அணையான மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 90.3 டி.எம்.சி. ஆனால் வருடா வருடம் மேட்டூர் அணையில் குவிந்து வரும் வண்டல் மண்ணால் தற்போது அங்கு 60.3 டி.எம்.சி நீரை மட்டுமே அணையில் சேகரிக்க முடிகிறது.
இதில் முறையாக அணையினை தூர்வாரினால் தமிழகத்தில் டெல்டா விவசாயிகளுக்கு ஆகஸ்ட் மாதங்களில் வழங்கப்படும் நீரில் ஒரு பங்கு நாமே தந்துவிட முடியும். இதிலும் தமிழகத்தில் மீதமுள்ள எல்லா அணைகளையும் முறையாக பராமரித்து தூர்வாரி வைத்திருந்தால் காவிரி நீரை நாம் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை” எனவும் அவர் கூறுகிறார்.
மேலும், “மேட்டூர் அணையில் குவிந்துள்ள வண்டல் மண்ணை அள்ளுவதற்கு தமிழக அரசு சார்பாக 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், பின் அந்த திட்டம் கைவிடப்பட்டது. ஏன் அணையில் குவிந்துள்ள வண்டல் மண்ணை அள்ளுவதற்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும். அரசு அதிகாரிகளின் கண்களுக்கு அவைகள் பொக்கிஷமாக தெரியவில்லையா?