சென்னை:சவுகார்பேட்டை தங்கசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜீத்மல்(74). இவர் சவுகார்பேட்டை காசி செட்டி தெருவில் பை கடை வைத்து நடத்தி வருகின்றார். கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு ஜீத்மலுக்கு பழக்கமான நபர் ஒருவர் அவரை அணுகி, தன்னிடம் ஒரு கிராம் எடையுள்ள 4 தங்க காசுகள் இருப்பதாகவும், அதை வைத்து 10ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் எனத் தெரிவித்துள்ளார்.
உடனே ஜீத்மல் தங்க காசுகளை வாங்கி சோதனையிட்டபோது, அது நிஜ தங்கக்காசாக இருந்ததால் 10 ஆயிரம் கொடுத்து தங்ககாசுகளை வாங்கினார். இதனைத்தொடர்ந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, அதே நபர் ஜீத்மலை அணுகி, தன்னிடம் 4 கிலோ தங்க காசுகள் இருப்பதாகவும், அதை பெற்றுக்கொண்டு முதலில் 90 லட்சம் தருமாறு கேட்டுள்ளார். இதனை நம்பிய ஜீத்மல் அந்த நபரை தனது மகன் சுரேஷிடம் அனுப்பியுள்ளார்.
அப்போது சுரேஷ், அந்த நபரிடம் அவ்வளவு பணம் இல்லையெனக் கூறி அவரை அனுப்பிவிட்டார். இந்நிலையில் நேற்று மீண்டும் சுரேஷை சந்தித்த அந்த நபர், தங்க காசுகளை வாங்கி கொள்ளுமாறு வற்புறுத்தியதால் சுரேஷ் தன்னிடம் 30 லட்சம் ரூபாய் மட்டுமே உள்ளதாகத் தெரிவித்துள்ளார். உடனே அந்த அடையாளம் தெரியாத நபர் 30 லட்சம் ரூபாய்க்கு 2.5 கிலோ தங்க காசுகள் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.