சென்னை: ஜமாலியா ஹைதர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராம் பால் (31). இவர் சென்னை மேட்டுப்பாளையம் பிஎச் சாலையில் தேவேந்திரபால் சவுகார் என்கிற பெயரில் 48 வருடங்களாக அடகு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அடகு கடைக்கு செல்போன் ரீசார்ஜ் செய்வதற்காக ஜாஃபர் அலி என்பவர் வந்துள்ளார். அவர் தினமும் ரீசார்ஜ் செய்வதற்காக வந்து அங்கு ராம் பாலுடன் பழக்கம் ஆகியுள்ளார். மேலும் ஜாபர் ரலி தான் ஒரு கட்டுமான நிறுவனம் நடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்துள்ளார்.
இதையடுத்து கடந்த மாதம் ஜாஃபர் அலி அடகு கடை உரிமையாளர் ராம்பாலை செல்போனில் தொடர்பு கொண்டு, தனது அத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது சிகிச்சைக்காக 32 சவரன் தங்க நகையை தாம்பரம் பகுதியில் உள்ள சோபா சந்து என்பராது அடகு கடையில் சுமார் 10 லட்ச ரூபாய்க்கு அடகு வைத்துள்ளதாகவும், தற்போது அதை மீட்க முடியாமல் மூழ்கும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்து அதை நீங்கள் மீட்டு வைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
இதையடுத்து ராமபால், ஜாபர் அலியுடன் தாம்பரத்தில் உள்ள சோபா சந்து என்பவர் அடகு கடைக்கு சென்று அங்கு அடகு வைத்திருந்த 32 சவரன் தங்க நகையை 10 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து மீட்டெடுத்து சென்று உள்ளார். இதையடுத்து கடந்த மாதம் 29ஆம் தேதி ராம்பாலின் அடகு கடைக்கு வந்த ஜாபர் அலி 3 சவரன் தங்க நகையை அடகு வைத்து ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாயை பெற்று சென்று உள்ளார். பின்னர் மீண்டும் கடந்த 22ஆம் தேதி அதே அடகு கடைக்கு சென்று 50 கிராம் தங்க நகையை அடகு வைத்து இரண்டு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுச் சென்றுள்ளார்.