சென்னை:ஆந்திராவை சேர்ந்த நகை வியாபாரி சுப்புராவ் மற்றும் அவரது மேலாளர் ரகுமான் நகை வாங்குவதற்காக 1.5 கோடி பணத்துடன் கடந்த 2ஆம் தேதி யானை கவுனி பகுதிக்கு ஆட்டோவில் வந்துள்ளனர். அப்போது இவர்களை வழிமறித்த கும்பல் ஒன்று லத்தி, கைவிலங்குடன் இறங்கி போலீசார் எனக்கூறி அவர்களிடம் இருந்த 1.5 கோடி பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். ஏமாந்த நகை வியாபாரி இது குறித்து யானை கவுனி போலீசாரிடம் அளித்தப் புகாரின் பேரில், போலீசார் ஐந்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.
நகை வியாபாரியிடம் 1.5 கோடி ரூபாய் கொள்ளையடித்த விவகாரத்தில் மேலும் 3 பேர் கைது! - யானைகவுனி கொள்ளை வழக்கில் மேலும் 3 பேர் கைது
சென்னை யானைகவுனியில் போலீஸ் எனக்கூறி நகை வியாபாரியிடம் 1.5 கோடி ரூபாய் கொள்ளையடித்த விவகாரத்தில் மேலும் 3 பேரை வெளி மாநிலத்திற்குச் சென்று போலீசார் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் ஹவாலா மற்றும் குருவி கும்பலை மட்டுமே குறிவைத்து கொள்ளையடிக்கும் இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகள் மற்றும் கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்போன் எண் ஆதாரங்களை வைத்து தனிப்படை போலீசார் விரைந்தனர். குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட 5 மாநிலத்திற்கு விரைந்த தனிப்படை தீவிரமாகத் தேடி முக்கிய குற்றவாளி இம்ராஸ் என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இம்ராஸ் அளித்த தகவலின் பேரில் நீலகிரி, சேலம், கர்நாடகா போன்ற இடங்களில் முக்கியக் குற்றவாளி இம்ரான், இம்தியாஸ் உட்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முக்கிய கொள்ளையன் இம்ரானிடம் நடத்திய விசாரணையில், குருவி, ஹவாலா ஆகியவற்றில் ஈடுபடும் நபர்களை குறிவைத்து ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரியவந்தது. இதே போல இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இம்ரான் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. கொள்ளையடித்த பின்பு போலீசாரிடம் நெருங்காமல் இருக்க, பல யுக்திகளை கையாண்டு தலைமறைவாக இருந்து வருவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
மேலும் இம்ரான் கொள்ளையடித்த பணத்தை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு வழங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக தமிழ்நாட்டையே உலுக்கிய அம்பத்தூர் இந்து முன்னணி சுரேஷ் குமார் கொலை வழக்கில் தொடர்புடைய பயங்கரவாத குற்றவாளிகளுக்கு இம்ரான் பண உதவி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
கொள்ளையடித்த பின்பு போலீசார் சரண்டர் ஆகுமாறு எச்சரிக்கை விடுத்தபோது, 'முடிந்தால் போலீசாரை நெருங்க சொல்லு' என போலீசாருக்கு இம்ரான் சவால் விட்டதாகவும் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்து 60 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து இரண்டு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மீதமுள்ள பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இடம் குறித்தும், வேறு ஏதேனும் கொள்ளைச் சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனரா என்ற பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.