சென்னை விமானநிலையத்திற்குப் பெருமளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் பேரில் சுங்கத் துறை அலுவலர்கள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்
அப்போது, துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ஷாருகான் (24), முகமது ஜின்னா(30), அன்சாரி (42) ஆகிய மூன்று பேரை சந்தேகத்தின்பேரில் அலுவலர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்துவைத்திருந்த ரூ.24 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள 564 கிராம் தங்கம் இருந்ததைக் கண்டுபிடித்தனர். மேலும், துபாயிலிருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சையது கமரூதீன் (37) என்பவரிடமிருந்து ரூ.14 லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள 332 கிராம் தங்கத்தையும் அலுவலர்கள் கைப்பற்றினர்.