சென்னை:நொளம்பூர் பாரதி சாலையில் ஏ.ஆர்.டி ஜூவல்லரி என்ற தங்க நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபின் ஆவர். இந்நிறுவனம், தங்க நகை சேமிப்பு, தங்க நகை கடன் மற்றும் 1 லட்சம் முதலீடு செய்தால் வாரம் 3 ஆயிரம் வீதம் 1 மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது.
இதனை நம்பிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இலட்சக் கணக்கில் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர். மேலும், சிவகார்த்திகேயனை வைத்து பிரமாண்டமான திரைப்படம் எடுக்கப்போவதாக கூறி பொதுமக்களை நம்பவும் வைத்துள்ளனர். மேலும், முதலீடு பணத்தில் ஏ.ஆர்.மால் மற்றும் பல மாவட்டங்களில் நகைக்கடையின் கிளைகள் என தொழிலை பெருக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சில நாட்கள் வட்டியை வாரி வீசி வந்த இந்நிறுவனம், கடந்த சில வாரங்களாக வட்டித் தராமல் பல ஆயிரம் கோடிகளை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில், ஏமாந்த பொதுமக்கள் பலரும் நகைக்கடை, ஏ.ஆர்.மால் என முற்றுகையிட, குண்டர்களை வைத்து தாக்கியதால் வேறு வழியின்றி அனைவரும் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று ஏ.ஆர்.டி நகைக்கடை ஊழியர்களான ஆசிக், விமல் அந்தோணி ஆகிய இருவரும் பூக்கடை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள ஒரு நகை கடைக்கு சென்று, 3 கிலோ தங்க நகைகளை வாங்கி கொண்டு, ஓலா காரில் அண்ணாநகருக்கு வந்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அண்ணாநகர் ரவுண்டானா அருகே வந்த போது நகைக்கடை ஊழியர் ஒருவர் அங்கு நின்று கொண்டிருந்த பெண் நிர்வாகியான பவானி என்பவரை அழைத்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, வெள்ளை நிற சொகுசு காரில் வந்த ஒரு கும்பல், காரில் மூவரையும் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், அந்த பெண்ணை மட்டும் வாவின் அருகே இறக்கி விட்டு, நகைக்கடை ஊழியர்களை கடத்தி சென்று தாக்கி அவர்களிடம் இருந்த 3 கிலோ தங்க நகைகளை பறித்து கொண்டு, நொளம்பூர் பைபாஸ் சாலையில் இருவரையும் விட்டு தப்பிச் சென்றதாக நகைக்கடை ஊழியர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளனர்.