சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் அதிகப்படியான ஊரடங்கு அமலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள், மார்க்கெட் பகுதிகள் போன்ற இடங்களில் அரசின் கரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகள், அங்காடிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை சரியான முறையில் பின்பற்றப்படுகின்றனவா என கண்காணிக்க மாநகராட்சியின் சார்பில் காவல் துறையுடன் இணைந்து பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வார விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தியாகராய நகர், புரசைவாக்கம் மற்றும் பாடி போன்ற வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவது மாநகராட்சியின் கவனத்திற்கு வந்தது.
இதனையடுத்து கடந்த வாரம் மாநகராட்சியின் சார்பில் வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் அதிகப்படியான மண்டல அமலாக்க குழுக்கள் பணியில் அமர்த்தப்பட்டு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வணிக வளாகங்கள், அங்காடிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.