சென்னை ராயப்பேட்டை கவுடியா மடம் சாலை அருகே சிறுவன் உள்பட மூன்று பேர் போதையில் சுற்றித் திரிந்துள்ளதை ரோந்துப் பணி காவலர்கள் கண்டுள்ளனர். பின்னர், அவர்களைப் பின்தொடர்ந்த காவலர்கள், அவர்கள் சென்ற லாட்ஜ் வரை சென்று மூன்று பேரையும் பிடித்தனர்.
அறையை சோதனை செய்தபோது ஐந்து கிராம் கஞ்சா, ஒரு அட்டை போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஹலீல் (20), 19 வயதுடைய இளைஞர், 17 வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்தது. ஹலீல் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இளைஞர்கள் தொடர்ந்து போதை மாத்திரைகளைப் பயன்படுத்தி காவல் துறையிடம் சிக்கிவரும் சம்பவம் சென்னையில் அதிகரித்துள்ளது. இதனால் மாதவரம் பகுதிகளுக்குள்பட்ட இடங்களில் மருந்துக்கடை வைத்திருக்கும் உரிமையாளர்களுடன் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.