தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர்கள் குடியிருப்பில் கைவரிசை.. போலீசிடம் சிக்கியது எப்படி?

சென்னை பரங்கிமலை ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பில் தங்க நகைகளைக் கொள்ளையடித்த நபர் உள்பட அதற்கு உடந்தையாக இருந்த தனியார் கோல்டு லோன் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 14, 2023, 8:06 AM IST

சென்னை: கடந்த ஜூலை 3ஆம் தேதி சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பில் வசித்து வரும் பெண் தலைமைக் காவலரான ஓம்சக்தி, ரவிச்சந்திரன் ஆகியோரின் பூட்டிய வீட்டை உடைத்து, வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 14 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக செயின்ட் தாமஸ் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, காவலர் குடியிருப்புக்குச் சென்று விசாரணை நடத்தியதில், விவரம் அறிந்த கொள்ளையனால் மட்டுமே இந்த மாதிரியான கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும் என முடிவு செய்து, அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது காவலர் குடியிருப்புக்கு வெளியே இருந்து ஒருவர் ஆட்டோவில் ஏறிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்த நிலையில், அந்த ஆட்டோவின் பதிவெண்ணைக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், ஆட்டோவில் ஏறிய நபர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டதை ஆட்டோ ஓட்டுநர் மூலம் போலீசார் உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து, சென்னையில் இருந்து ரயில் மூலம் தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார் புறநகர் மின்சார ரயில் வழித்தடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஆட்டோவில் ஏறிச் சென்ற அதே நபர் ஆந்திர மாநிலம் எல்லையில் உள்ள சூலூர்பேட்டை வரை செல்லும் மின்சார ரயிலில் ஏறிச் சென்றதும் உறுதியாகி உள்ளது.

இவ்வாறு ஆட்டோ, ரயில் என ஏறி நகையுடன் தப்பிச் சென்ற நபர் ஆந்திரா சென்றிருக்கலாம் என்பதை அறிந்த போலீசார், கீழ் திருப்பதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சிசிடிவியில் பதிவான காட்சியை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, ஒரு விடுதியில் அதே நபர் வந்து தங்கிச் சென்றது தெரிய வந்துள்ளது.

இதன் பின்னர், தங்கும் விடுதியில் கொடுக்கப்பட்ட முகவரியைக் கொண்டு அந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்வரலு என்பதை கண்டறிந்து அவரை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, வெங்கடடேஷ்வரலு குறித்து நடத்திய விசாரணையில் ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலத்தில் பல குற்ற வழக்குகள் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

மேலும், சென்னையில் போலீசாரிடம் அதிகப்படியான நகை மற்றும் பணம் இருக்கும் என நினைத்து காவலர் குடியிருப்பில் கைவரிசை காட்டியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து விசாரித்ததில், கர்னூல் மாவட்டத்தில் உள்ள தனியார் கோல்டு லோன் நிறுவனத்தின் கிளை மேலாளர் புசுரெட்டி மற்றும் நகை மதிப்பீட்டாளர் அய்யன்னா என்பவர்களிடம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனை அடுத்து, புசுரெட்டி மற்றும் அய்யன்னா ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு மாநிலங்களில் பூட்டிய வீடுகளில் இருந்து நகைகளைத் திருடி கைவரிசை காட்டி வந்த வெங்கடேஸ்வரலு கொண்டு வரும் நகைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி வேறு ஒரு இடத்தில் விற்று விடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மூவரையும் கைது செய்து சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல் நிலையம் அழைத்து வந்த தனிப்படை போலீசார், நகைகளைத் திருடிய வெங்கடேஷ்வரலுவிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கிய புசுரெட்டி மற்றும் அய்யன்னா ஆகியோர் குற்றச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்து, ஆலந்தூர் நீதிமன்ற உத்தரவின் படி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:சென்னையில் ரூ.5.8 கோடி மோசடி செய்தவர் கைது; மருத்துவக்கல்லூரியில் சீட் என ஏமாற்றியது அம்பலம்!

ABOUT THE AUTHOR

...view details