தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பள்ளியில் சேர 29,000 பேர் விண்ணப்பம்: செப். 25 வரை விண்ணப்பிக்கலாம்! - 25 percent reservation

சென்னை: இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி 29 ஆயிரம் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பம் செய்துள்ளனர்.

edu
edu

By

Published : Sep 2, 2020, 9:48 AM IST

தமிழ்நாட்டிலுள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் நுழைவு வகுப்பில் 25 விழுக்காடு மாணவர் சேர்க்கைக்கு rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதிமுதல் விண்ணப்பங்கள் தொடக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 25ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பத்துடன் மாணவர்களின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர் எனில் அதற்கான வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றையும் சேர்த்து தாக்கல்செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள எட்டாயிரத்து 628 நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 771 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 617 பள்ளிகளில் எட்டாயிரத்து 62 மாணவர்களும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 84 பள்ளிகளில் 873 மாணவர்களும் சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர் என்ற விபரமும் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்காக செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை 29,000 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

மாணவர்கள் விண்ணப்பம் செய்யும்பொழுதே, அவர்கள் வசிக்கும் பகுதிக்கும் பள்ளி இடையே ஒரு கிலோ மீட்டருக்கு குறைவான தூரம் உள்ளதா என்பதை இணையதளம் காண்பிக்கிறது.

எனவே ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள தனியார் பள்ளியில் மட்டுமே அந்தக் குழந்தைகளைச் சேர்க்க விண்ணப்பிக்க முடியும். பள்ளியில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களின் தகுதியான விண்ணப்பங்கள் செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு பள்ளிக் கல்வித் துறை இணையதளத்திலும், பள்ளியின் அறிவிப்பு பலகையிலும் வெளியிடப்படும்.

ஒரு பள்ளியில் உள்ள இடத்திற்கு அதிகமாக மாணவர்கள் விண்ணப்பித்திருந்தால் அவர்களில் காலியாக உள்ள இடத்திற்கு குலுக்கல் முறையில் அக்டோபர் 1ஆம் தேதி தேர்வுசெய்யப்படுவார்கள்.

தேர்வுசெய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் அக்டோபர் 3ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details