சென்னை: அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்வாரிய அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வுக் கூட்டம் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்னகம் சேவை மையத்தில் 10.50 லட்சம் புகார் பெறப்பட்டு, அதில் 90 விழுக்காடு புகார்கள் சரி செய்யப்பட்டுள்ளது. மின்னகத்தில் வரப்பெற்ற புகார்களை முதலமைச்சர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
234 தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு புதிய திட்டங்கள் நிறைவேற்றுதல் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அந்த பகுதி மக்களிடம் பேசி கோரிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என வித்தியாசம் பார்க்காமல் அனைவரிடமும் கருத்து கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம்
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 28 ஆயிரம் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மின்சார சட்ட மசோதாவில் விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்டவர்கள் இலவச மின்சாரம், 100 யூனிட் இலவச மின்சாரம் பாதிக்கப்படும் என்றாலும் தமிழ்நாட்டில் இலவச மின்சார திட்டம் தொடரும்.
மின்சாரத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் 1 யூனிட் கூட வீணடிக்காமல் உற்பத்தி செய்த மின்சாரம் முழுவதுமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மின் தட்டுப்பாடு இல்லை. சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக ஒரு சில இடங்களில் மின்வெட்டுகள் ஏற்படலாம். கடந்த ஓராண்டில் சிக்கன நடவடிக்கையால் மின்வாரியத்தில் 2,700 கோடி வட்டி சேமிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் பார் டெண்டரில் 1,778 பேர் நேரில் விண்ணப்பம் பெற்றுள்ளனர். டெண்டர் அறிவிப்பு வெளிப்படையாக உள்ளது. அனைவருக்கும் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டுள்ளது. டெண்டரில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
எந்த இடத்திலும் புகார்கள் இல்லை. டாஸ்மாக் டெண்டர் தொடர்பாக தனி நபர்கள் அவர்களுக்குள்ளாகவே பேசி தவறான முறையில் கருத்தை வெளியிடுகின்றனர். இது தொடர்பாக புகார்கள் வெளியிடப்படும். தவறுகள் நடைபெற்றால் கவனத்திற்கு கொண்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஓராண்டில் பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது .மதுபான கடைகள் குறித்து இந்தியா முழுவதும் கொள்கை முடிவெடுத்தால் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டிற்கு நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்படும் என்ற முதலமைச்சர் ஸ்டாலின்