சென்னை: போதையேற்றும் கண்கள்.. இன்றும் இளைஞர்களின் கனவுக் கன்னி.. உலகத்தை விட்டுச் சென்று இன்றுடன் 27 வருடங்கள் கழிந்தாலும்.. சினிமாத் துறையில் அவரின் அசைக்க முடியாத ஆளுமை இன்றும் இருக்கிறது. தமிழ் சினிமாவில் 80 களில் கொடி கட்டி பறந்த சில்க் ஸ்மிதா, அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
ஆந்திராவில் ஒர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த சில்க் ஸ்மிதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. வீட்டு வேலை செய்து கொண்டிருந்த விஜயலட்சுமி வண்டிச் சக்கரம் படத்தின் மூலம் சில்க் ஸ்மிதாவாக அறிமுகமாகினார். ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட விஜயலட்சுமியை வண்டிச்சக்கரம் படத்தில் சாராயம் விற்கும் சில்க்காக அறிமுகப்படுத்தியவர் நடிகர் வினுச்சக்ரவர்த்தி.
அவரின் கிறங்கடிக்கும் கண்கள், தேன் தடவிய குரல், பார்ப்போரை சுண்டி இழுக்கும் அழகு, அசாத்திய நடிப்பு திறமையால் தமிழ் சினிமாவில் 80களில் கனவுக் கன்னியாக கொடி கட்டிப் பறந்தார். சில்கிற்கு அவருடைய பெற்றோர் 17 வயதிலேயே திருமணம் செய்து வைத்தனர். ஆனால், சில வருடங்களிலேயே அந்த உறவில் இருந்து வெளியேறிவிட்டார்.
அதன் பிறகு சினிமாவில் தனக்கு என தனி இடத்தை பிடித்து சில்க் ஸ்மிதா இல்லாத படங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கினார். ரஜினி, கமல் என நட்சத்திர அந்தஸ்து உள்ள படங்களில் சில்க் ஸ்மிதாவின் பெயரும் இடம்பெற்றது. தென்னிந்தியா முழுவதும் பிரபலமான சில்க்கின் புகழ் வட இந்தியாவிலும் பரவியது.
பெரும் ரசிகர் பட்டாளங்களை தனக்கென்று கொண்டிருந்தார் சில்க் ஸ்மிதா. சில்க்கின் பாட்டு மட்டும் போதுமானது என்று ரசிகர்கள் திரையரங்குகளில் பாதி படங்களில் வெளியேறிய சம்பவங்களும் உண்டு. அவருக்காக பல இயக்குனர்கள் காத்திருந்து இயக்கிய படங்களும் உண்டு.
தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த அவரின் வாழ்க்கை மர்மம் நிறைந்த ஒன்றாகவே இருந்தது. தன் உடலை மட்டுமே பார்த்த சமூகம் தன் உள்ளத்தை பார்க்கவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு எப்போதும் உண்டு. பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களில் நடித்தாலும் வலுவான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருந்தது. ஆனால் சினிமா அப்படி விடவில்லை என்பதில் இவருக்கு சற்று வருத்தம் உண்டு.
சினிமாவிற்குள் நுழைந்த 17 வருடத்திலேயே தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு படப்பிடிப்பு சமயத்தில் சில்க் கடித்து வைத்துவிட்டு போன ஆப்பிளை, ரசிகர் ஒருவர் 300 ரூபாய்க்கு ஏலம் விட்ட சம்பவமும் நடந்துள்ளது. புகழின் உச்சியில் இருக்கும் போதே தனக்கு நிகழ்ந்த மோசமான அனுபவங்களால் தனது 35 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.
நம்பிக்கையற்ற உறவுகளின் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் கடிதம் எழுதுவிட்டு இவ்வுலகை விட்டு மறைந்தது அந்த கவர்ச்சி தேவதை. இவரது வாழ்க்கை வரலாற்றை வித்யாபாலன் நடிப்பில், டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் எடுத்தனர். இன்னும் எத்தனை காலம் ஆனாலும் சில்க் என்ற பெயரும் அவரது கண்களும் ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும். இவர் இறந்து 27 ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் இவர் புகழ் மங்கவில்லை என்பதை சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் நிருபித்துள்ளது.
நடிகர் விஷால் நடித்த மார்க் ஆண்டனி படத்திலும் சில்க் போல சாயல் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா மூலம் மீண்டும் சில்க்கை திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் வரும் காட்சிகள் திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவாரம் சில்க் எப்படி வாழ்ந்து மறைந்தார் என்பதை காட்டியது.
அவரது நடனத்தில் அடியே மனம் நில்லுனா நிக்காதடி, பொன்மேனி உருகுதே, நேத்து ராத்திரி உள்ளிட்ட பாடல்கள் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவை. நல்ல நடிகையாகவும் மக்கள் மனதை வென்றுள்ளார். அலைகள் ஓய்வதில்லை படம் இவரது நடிப்பு திறமைக்கு சான்று.
இதையும் படிங்க:பாக்ஸ் ஆபிஸை அதகளப்படுத்தும் ஷாருக்கான்... 1,000 கோடி வசூலை நெருங்கும் ஜவான்!