சென்னை: கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தொற்று பரவல் நிலையைக் கொண்டு மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. 2, 3ஆம் வகையில் உள்ள மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அமல் படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கரோனா பெருந்தொற்று ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று (ஜூன்.28) முதல் சென்னை அரசு அருங்காட்சியகம் பொது மக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை அருங்காட்சியகத்தை பொது மக்கள் பார்வையிடலாம்.
அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் பார்வையாளர்கள் உரிய முகக்கவசம் மற்றும் தகுந்த இடைவெளி உள்ளிட்ட அரசால் அறிவிக்கப்பட்ட கோவிட்-19 பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பார்வையிட அனுமதிக்கப்படுவர்.
அதே போல, வகை 2 மற்றும் 3-ல் உள்ளடங்கிய அரியலூர், கடலூர், கிருஷ்ணகிரி, பழநி, கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட அருங்காட்சியகங்களும் இன்று முதல் கோவிட்-19 பாதுகாப்பு, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கீழடி 7ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களின் புகைப்படத் தொகுப்பு