சென்னை காசி திரையரங்கம் எதிரே அப்துல் ரசிக் என்பவர் அல் அமீன் என்ற பெயரில் பேக்கரி கடை நடத்திவருகிறார். கரோனா இரவு நேர ஊரடங்கு காரணமாக நேற்று (ஜனவரி 11) இரவு 9.40 மணியளவில் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அருகில் இருந்த ஏ.டி.எம். காவலாளி அந்த நபரைப் பார்த்து யார் நீங்கள்? எனக் கேட்டுள்ளார்.
காவலாளியை நம்பவைத்து கொள்ளை
அதற்கு அவர், தான் இந்தக் கடையில் பணிபுரிந்துவருவதாகவும், தனது பொருள்கள் கடையின் உள்ளே இருப்பதாகவும் இது குறித்து முதலாளியிடம் சொல்லிவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய காவலாளியும் கடை திறப்பதற்கு உதவி செய்துள்ளார்.
பின்பு கடையினுள் சென்ற கொள்ளையன் ஆறாயிரம் ரூபாய் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள், கல்லாவில் இருந்த 25 ஆயிரம் ரூபாய், எட்டாயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு வெளியே வந்துள்ளார்.