சென்னை: தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் சூரத் அம்மன் கோயில் முதல் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர், பரமேஸ்வரன் (62).
இவரின் மகன் திருமணத்திற்காகக் கடந்த 8ஆம் தேதி குடும்பத்துடன் திண்டுக்கல் சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கேயே தங்கி இருந்துள்ளனர்.
கதவை உடைத்து நகைக்கொள்ளை:
இந்நிலையில், பரமேஸ்வரன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை அருகில் வசிப்பவர் பரமேஸ்வரனுக்குத் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வரனின் குடும்பத்தார் திண்டுக்கல்லில் இருந்து விரைந்து வீட்டிற்குச் சென்று, பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்படாமல் சாவியால் திறக்கப்பட்டு, 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து பரமேஸ்வரன், பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல் துறையினர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருங்களத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறும் கொள்ளைச் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:'ரெய்டுக்கும் திமுக அரசுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை'