தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பள்ளியில் 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை - வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்! - rte tnschool gov in

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளான எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் அரசின் நிதி உதவியுடன் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், படிப்பதற்கு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 17, 2023, 10:34 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள சுமார் 8000 தனியார் பள்ளிகளில் 83 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன. இது குறித்து தனியார் பள்ளியில் இயக்குநர் நாகராஜ முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009இன் படி 2023-24ஆம் கல்வி ஆண்டில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்கேஜி வகுப்பிலும், ஒன்றாம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் வகுப்பிலும் சேர்க்கைக்கு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே மாதம் 18ஆம் தேதி வரை rte.tnschool.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மே மாதம் 18ஆம் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விபரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும் சம்பந்தப்பட்ட பள்ளி தகவல் பகலையிலும் மே மாதம் 21ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் எல்கேஜி வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 2019 ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் 2020 ஜூலை மாதம் 31-க்குள்ளாகவும், ஒன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 2017 ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் 2018 ஜூலை மாதம் 31ஆம் தேதிக்குள்ளும் பிறந்திருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பிக்கும்பொழுது குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவின் கீழ் விண்ணப்பிக்க சாதிச் சான்றிதழ், சிறப்பு பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ், நலிவடைந்த பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் கீழ் உள்ளதற்கான வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மேலும் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள அலுவலகங்களில் கட்டணம் இன்றி விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒதுக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மே மாதம் 23ஆம் தேதி அன்று குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட குழந்தையின் பெயர், பட்டியல் விண்ணப்பத்துடன் 24ஆம் தேதி அன்று இணையதளத்திலும் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பள்ளிகளிலும் வெளியிடப்படும்.

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை மே மாதம் 29ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும். இது குறித்து ஏதாவது தகவல் வேண்டுமானால் கல்வித்துறை அலுவலகங்களை பெற்றோர்கள் அணுகலாம்” என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:26 நாட்களாக தொடரும் நீலகிரி பூங்கா ஊழியர்கள் போராட்டம் - ஒருவர் பலி!

ABOUT THE AUTHOR

...view details