சென்னை:தமிழ்நாட்டில் இருந்து அமர்நாத் யாத்திரை சென்று அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு ஆபத்திலிருந்து தப்பித்து, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 25 பேர் நேற்று நள்ளிரவு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினர்.
அவர்கள் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது , “நாங்கள் ஒன்பது பெண்கள் உள்பட 25 பேர் ஜூலை 3ஆம் தேதி சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டோம். 4 ஆம் தேதி அமர்நாத் சென்றோம். அப்போது அங்கு நல்ல சீதோசன நிலை நிலவியது. பின்பு அமர்நாத்துக்கு 6 கி.மீ., முன்னதாக உள்ள பஞ்சதரணி என்ற பகுதிக்கு சென்றோம்.
பின்னர் 4 ஆம் தேதி இரவு பஞ்சதரணியில் முகாமில் தங்கியிருந்தோம். அதன் பின்பு 5 ஆம் தேதி காலையில் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தோம். தரிசனத்தை முடித்துவிட்டு கீழே இறங்கும்போதே மழை பெய்ய தொடங்கிவிட்டது. உடனடியாக அமர்நாத்தில் இருந்து கீழே இறங்குவதையும் அமர்நாத்துக்கு மேலே ஏறுவதையும் தடை செய்து விட்டனர்.
நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு தவித்துக் கொண்டிருந்தோம். அங்குள்ள மக்களிடம் மழை எப்போது ஓயும்? எங்களை எப்போது கீழே இறங்க விடுவார்கள்? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ஒன்றிலிருந்து, 4 நாள்கள் கூட ஆகலாம். அதுபற்றி உறுதியாக சொல்ல முடியாது என்று கூறிவிட்டனர்.