சென்னை: சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில் அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை ‘ஆப்ரேஷன் காவிரி’ திட்டத்தின் மூலம் மீட்கும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. சூடானில் இருந்து மீட்கப்படும் தமிழர்களை தமிழ்நாடு அரசின் செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை அயலகத் தமிழர் நலவாழ்வுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று (மே 05) சூடானில் இருந்து மீட்கப்பட்ட 12 தமிழர்கள் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் அழைத்துவரப்பட்டனர். அவர்களை விமான நிலையத்தில் அயலாக்க தமிழர் நலவாழ்வுத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் வரவேற்று ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களைச் சொந்த ஊருக்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் அனுப்பி வைத்தனர்.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், “சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போரில் சிக்கி உள்ள தமிழர்களை கண்காணித்து தொடர்ந்து அவர்களை தாயகம் அழைத்து வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை சூடான் நாட்டில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 247 பேரை மத்திய, மாநில அரசுகள் உதவி உடன் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டு அவர்களுன் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதாச்சலம், சிதம்பரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 12 பேர் இன்று டெல்லி அழைத்துவரப்பட்டு அங்கிருந்து சென்னை அழைத்துவரப்பட்டுள்ளனர். அங்கு 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் இருந்ததாக தகவல் வந்தது. அவர்களையும் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீதமுள்ளவர்களையும் உடனடியாக தமிழ்நாடு அரசு பாதுகாப்பாக அழைத்து வரும். தமிழர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு செலவிலேயே அழைத்து வந்து அவர்கள் இல்லங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்’’ என்றார்.