சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் அங்கு குறைந்துவிட்டாலும், மற்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக இந்தியாவில் 137 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒருவருக்கும் மட்டும் வைரஸ் தொற்று உள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்திருந்தது.
இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. சில அதிரடி உத்தரவுகளையும் நேற்று முதலமைச்சர் பிறப்பித்தார்.
இதுமட்டுமில்லாமல் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தினமும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இன்று வெளியிட்டுள்ள தகவலில், “இன்றைய நிலவரப்படி 1 லட்சத்து 84 ஆயிரத்து 681 விமானப் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கீரினிங் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களில் 2 ஆயிரத்து 635 பயணிகள் 28 நாள்களுக்கு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர கரோனாவுக்கான தனி வார்டில் 24 பயணிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா பாதுகாப்பு: மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் அதிரடி நடவடிக்கை