சென்னை: திருவொற்றியூர் மண்டலத்தில் நடைபெற்ற “மக்களைத் தேடி மேயர்” என்ற திட்டத்தின் மூலம் இன்று (10.08.2023) பொதுமக்களிடமிருந்து 235 கோரிக்கை மனுக்களைப் பெற்ற மேயர் ஆர்.பிரியா மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
திருவொற்றியூர் மண்டலத்தில் இன்று, சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், “மக்களைத் தேடி மேயர்” திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மக்கள் குறை தீர்ப்பு அமைப்பு வாயிலாக, சென்னை மாநகராட்சிக்கு வரும் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து தீர்வு காணப்பட்டு வருகிறது.
மேலும், 1913 (அழைப்பு மையம்) மூலமாக பொது மக்களிடம் புகார்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி, அப்புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது. பின்பு, ‘நம்ம சென்னை’ எனும் செயலி மூலமாக பொது மக்களிடம் புகார்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி அப்புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு 2023 - 2024 பட்ஜெட் கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயரிடம், மாநகராட்சியில் இருக்கும் 15 மண்டலங்களிலும் பொது மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளைக் களையும் பொருட்டு, மேயர், மாதத்திற்கு ஒரு முறை, ஏதேனும் ஒரு வட்டார அலுவலகத்தில், மனுக்களை நேரடியாக பெறும் வகையில் “மக்களைத் தேடி மேயர்” என்ற திட்டம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: கபில் ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு: உலக சாதனைப் படைத்த பள்ளி மாணவர்கள்
அதைத் தொடர்ந்து முதற்கட்டமாக “மக்களைத் தேடி மேயர்” திட்டத்தின் கீழ், வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மேலும், மே-31ஆம் தேதி அன்று மண்டலம் 6-லும், ஜூலை 5ஆம் தேதி அன்று மண்டலம் 13-லும், அந்த அந்த மண்டலங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இன்று அகஸ்ட் 10ஆம் தேதி திருவொற்றியூர் மண்டலத்தில் காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் 235 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்டுள்ள கோரிக்கை மனுக்கள் மீது தொடர்புடைய துறைகள் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என மேயர் ஆர்.பிரியா மக்களிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு முகாமில் 20 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் அடங்கிய தாய் சேய் நலப் பெட்டகங்களும், மேலும் 32 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் மேயர் ஆர்.பிரியா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், துணை மேயர் மு.மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: கால்நடை வைத்திருப்போருக்கு சுகாதாரத்துறை வழங்கியுள்ள கட்டுப்பாடுகள் என்ன?