சென்னை: எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இன்று (டிச.26) அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் வைத்து நடைபெற்ற இந்த கூட்டம், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது.
அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம் - முழு விவரம்! - 23 தீர்மானங்கள் முழு விவரம்
AIADMK General Committee meeting: எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Etv Bharatஅதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் 23 தீர்மானங்கள் - முழு விவரம்!
Published : Dec 26, 2023, 12:15 PM IST
|Updated : Dec 26, 2023, 1:18 PM IST
இதனையொட்டி, கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது புகைப்படங்களுக்கு ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, 23 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்படி,
- சிறப்பாக அதிமுகவை வழிநடத்தி வருவதாக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகள்.
- மதுரையில் நடத்தப்பட்ட ‘கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு' வரலாற்று வெற்றி பெற்றதற்கு பாராட்டுகள்.
- 'மிக்ஜாம்' புயல் மற்றும் தென்மாவட்ட பெருமழையின் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்படும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்காததாக திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கிட வலியுறுத்தல்.
- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் பேச்சை ஒளிபரப்பச் செய்யாமல் இருட்டடிப்பு செய்வதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கை சம்பந்தமாக சட்டமன்ற மரபுகளை கடைபிடிக்காததாக பேரவைத் தலைவருக்கு கண்டனம்.
- கச்சத் தீவை மீட்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமலும், இலங்கை கடல் கொள்ளையர்களால் வாழ்வாதாரம் இழந்த மீனவ மக்களை வஞ்சிப்பதாக திமுக அரசுக்கு கண்டனம்.
- பொய்யான 520 வாக்குறுதிகளை அளித்து, அவற்றை நிறைவேற்ற முடியாமல் பல்வேறு நாடக அரங்கேற்றங்களை நிகழ்த்துவதாக கண்டனம்.
- சட்டம்-ஒழுங்கு சீரழிவிற்கு கண்டனம்.
- 'கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்' என்ற ஊழல் ஆட்சியை பொம்மை முதலமைச்சராக நடத்துவதற்கு கண்டனம்.
- 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய அரசுக்கு வலியுறுத்தல்.
- நாடாளுமன்ற மக்களவையில் நடந்த பாதுகாப்பு குறைபாட்டை கண்டிப்பதாக தெரிவிக்கும் அதேநேரத்தில், ஜனநாயக அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.
- ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டி மத்திய அரசை வலியுறுத்தல்.
- தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் பயிர்கள் வெள்ளத்தால் மூழ்கி பெரும் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், உரிய நிவாரணம் வழங்காமல் இருப்பதாக கண்டனம்.
- மாநிலத்தில் நெசவுத் தொழிலையும், நெசவுத் தொழிலாளர்களின் நலனையும் பாதுகாக்கத் தவறியதாக கண்டனம்.
- திமுக அரசின் பட்டியலின மக்கள் விரோதப் போக்கிற்கு கண்டனம்.
- தமிழக உயர்கல்வியின் தரம் குறையும் வகையில், அவசர கதியில் பொதுப்பாடத் திட்டத்தை அமல்படுத்தத் துடிப்பதாக கண்டனம்.
- தமிழ் உள்ளிட்ட 22 மாநில மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் அலுவல் மொழிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தல். அதேபோல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியைக் கொண்டுவர வலியுறுத்தல்.
- சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதாக கண்டனம்.
- காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் திமுக சந்தர்ப்பவாதம் மற்றும் துரோகமாக செயல்படுவதாக கண்டனம்.
- 'நீட்' நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என மக்களை ஏமாற்றி வாக்குறுதி அளித்ததாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிக்கும் அதேநேரத்தில், மாநிலம் முழுவதும் முடங்கிப் போயிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும், முதலமைச்சருக்கும் கடும் கண்டனம்.
- முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அரசு கொண்டுவந்த திட்டங்களை முடக்கியது மட்டுமல்லாமல், சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணத்தில் இருந்து ஆவின் பால் விலை வரை உயர்த்தி, மக்களை வஞ்சித்து வரும் சர்வாதிகார அரசாக திமுக அரசு இருப்பதாக கண்டனம்.
- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும், புதிய அணை கட்டப்போவதாக நெருக்கடி கொடுக்கும் கேரள அரசின் செயலை கண்டிக்காமலும், அதேநேரம் அதை தடுக்க சட்டப் போராட்டம் நடத்தாமலும் அரசு இருந்து வருவதாக கண்டனம்.
- எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தகுதியுடைய அனைவரும் வாக்களிக்க ஏதுவாக, குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியல் அமைந்திட இந்தியத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தல்.
- எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில், அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் களப்பணி ஆற்றிட சூளுரை.
இதையும் படிங்க:'ஊழல் வழக்குகளில் சிக்கும் திமுக அமைச்சர்களுக்கு புழல் சிறையில் தனி பிளாக்' - அண்ணாமலை விமர்சனம்
Last Updated : Dec 26, 2023, 1:18 PM IST