சென்னை:தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 2,269 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன என பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு இன்று(ஜூலை13) கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் ஜூலை 13ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்," கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 28,227 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தமான் நிக்கோபார் தீவில் இருந்து வந்த ஒருவருக்கும் தமிழ்நாட்டில் இருந்த 2,268 நபர்களுக்கு என 2,269 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 63 லட்சத்து 65 ஆயிரத்து 165 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 35 லட்சத்து 8 ஆயிரத்து 526 நபர்கள் நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரிய வந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 18,282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.