சென்னை:கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டப்படி, மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2016ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில், தமிழ்நாடு போக்குவரத்து துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பாக சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் அடங்கிய தொழில்நுட்பக் குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 642 பேருந்துகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதில் 242 பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்ய உள்ளதாகவும், இது மொத்த கொள்முதலில் 37 சதவீதம் எனவும் பதில்மனுவில் கூறப்பட்டுள்ளது.