சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் (பிப்ரவரி 19) நடைபெறவுள்ளது. சென்னையில் மொத்தம் 200 வார்டுகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்களிக்க 1,197 வாக்குச்சாவடி மையங்களும், 5,013 வாக்குப்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 213 பதற்றமான வாக்குசாவடி மையங்களில், 757 வாக்குபதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மிகவும் பதற்றமான 54 வாக்குச் சாவடிகளில், 143 வாக்குப்பதிவு மையங்கள் அமைந்துள்ளன. அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, பாரதி பெண்கள் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி உட்பட மொத்தம் 11 வாக்கு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.
இயந்திரங்கள் ஒப்படைப்பு
அனைத்து வாக்குசாவடிகளிலும் ஒரு காவலர், சிறப்பு காவலர்களால் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. 390 மொபைல் பார்டிகளில் துப்பாக்கியுடன் ஒரு உதவி ஆய்வாளர், ஆயுதம் ஏந்திய காவலர் பணியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பதற்றமான வாக்குசாவடிகளில் 1 உதவி ஆய்வாளர், 4 காவலர்கள் பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் 1 அதி விரைவு படை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக வாக்குப்பதிவு மையங்கள் உள்ள வாக்குசாவடிகளில் கூட்டத்தை நெறிப்படுத்த, ஒரு உதவி ஆய்வாளர், 4 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 72 தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர்.