சென்னையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீட்டிலேயேத் தங்கியிருக்கின்றனர். வாகனங்கள் தொழிற்சாலைகள் முற்றிலும் இயங்கவில்லை. இதன் காரணமாக, காற்று மாசு மிகவும் குறைந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டிலும் தற்போது வேகமாகப் பரவிவருவதால், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி, பொழுதுபோக்கு பூங்கா, வணிக வளாகம், திரையரங்குகள், தனியார் நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. வெளியில் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுளதால், பொதுமக்கள் வெளியில் வருவதில்லை.
முன்னதாக சென்னையில் தினந்தோறும் 30 லட்சம் வாகனங்கள் இயக்கப்பட்டுவந்தன. தற்போது இந்த வாகன இயக்கமும் முழுவதுமாக குறைந்துள்ளது. ஒருசிலர் மட்டுமே தேவைகளுக்காக வெளியில் வருகின்றனர். இதனால் சென்னை மாநகரில் உள்ள சாலைகளில் ஆள் நடமாட்டம் இல்லாமல் குறைவான வாகனங்களே காணப்படுகின்றன.
இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதேபோல் சென்னையில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூலம் பல்வேறு விதமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது தொழிற்சாலைகள் இயங்குவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அவையும் மூடப்பட்டுள்ளன. இதனால் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் நச்சு கலந்த புகையளவும் குறைந்துள்ளன.